ADDED : அக் 28, 2025 05:34 AM

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாததால் தான் இறந்ததாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் அளித்த பேட்டி:
டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசு நன்னீரில் வளரக்கூடியது. தற்போது மழைக்காலம் என்பதால், கூடுதலாக உற்பத்தியாகும். எனவே, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள், 2012ம் ஆண்டில் 66 பேர்; 2017ல் 65 பேர் என பதிவாகி உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகள் தான் உயிரிழப்புகள் அதிகம். தற்போது, டெங்கு உயிரிழப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. இந்தாண்டில் இதுவரை, 16,546 பேர் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும், 1,500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டெங்குவால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இதய நோயாளிகளாக உள்ளனர். அவர்கள் காய்ச்சல் பாதித்தபோது, மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிய அளவிலான காய்ச்சல் பாதிப்பு என்றாலும், உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரையில் மட்டுமே மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

