அரிசியா, கோதுமையா; என்ன சாப்பிடுகிறீர்கள்? மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள்
அரிசியா, கோதுமையா; என்ன சாப்பிடுகிறீர்கள்? மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள்
UPDATED : அக் 28, 2025 11:26 AM
ADDED : அக் 28, 2025 05:52 AM

சென்னை: தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, மூன்று இடங்களில், நவம்பர், 10ல் துவங்க உள்ளது. கணக்கெடுப்பில், அரிசி, கோதுமை, சிறுதானியம் போன்றவற்றில் எதை சாப்பிடுகிறீர்கள் என்பது உட்பட, 34 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அதன்படி, 2011ம் ஆண்டு, நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஆனால், கொரோனா காரணமாக அப்பணி நடக்கவில்லை. எனவே, 'நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரியில் நடக்கும்' என, மத்திய அரசு கடந்த ஜூனில் அறிவித்தது. அதையொட்டி, தமிழகத்தில் நவம்பர், 10 முதல் 30ம் தேதி வரை, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு தாலுகாவிலும், 120 முதல் 150 ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களை குறிப்பிட்ட தாலுகாவின் தாசில்தார்கள் கண்காணிப்பர்
முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும் இப்பணி நடைபெற உள்ளது. மாதிரி கணக்கெடுப்பு பணியை எளிமைப்படுத்தும் வகையில், நவ., 1 முதல் 7ம் தேதிக்குள், கணக்கெடுப்பு நடக்கும் பகுதியில் உள்ள மக்கள், தாங்களாகவே தங்களின் சுய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை துவங்க உள்ளது. இது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக, மக்கள் அரிசி, கோதுமை, சிறுதானியம் போன்றவற்றில் எந்த வகை உணவை சாப்பிடுகின்றனர் என்ற விபரம் கேட்கப்பட உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும், 120 முதல், 150 ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களை, குறிப்பிட்ட தாலுகாவின் தாசில்தார்கள் கண்காணிப்பர். நகராட்சி பகுதிகளில், நகராட்சி கமிஷனர்கள் அல்லது பிற அதிகாரிகள் கண்காணிப்பர். தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, இந்த பணிகளை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இவற்றை வழிநடத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

