ADDED : ஜூலை 21, 2024 07:18 AM
யாத்கிர்: அசுத்தமான தண்ணீர் குடித்த குழந்தைகள் உட்பட 50 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
யாத்கிர் கெம்பாவி அருகே முதனுார் கிராமத்தில் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியின் மூலம், கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் வாயிலாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, மேல்நிலை குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை. இதுகுறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம், கிராம மக்கள் பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மதியம் வரை கிராமத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் உட்பட 50 பேருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டது. வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கெம்பாவி, யாத்கிர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசுத்த தண்ணீரை குடித்ததால் 50 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் கிராம பஞ்சாயத்து மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.