ADDED : ஜூலை 15, 2024 04:44 AM
பெங்களூரு, : பெங்களூரு சிட்டி ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில், இறந்து கிடந்த 6 வயது சிறுமி யார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரின் தாயாரை தேடி வருகின்றனர்.
பெங்களூரு சிட்டி ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடத்தில், ஜூலை 3ம் தேதி 6 வயது சிறுமியின் உடல் கிடந்தது.
அதிர்ச்சியடைந்த பயணியர், ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுமியின் உடலை, பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்தனர். விசாரணையில், இறந்த சிறுமியின் பெயர், மரியம் என தெரியவந்தது.
அவரது தாயார் ஹினா, கணவரை விட்டு பிரிந்து, ராஜு என்பவருடன் வசித்து வந்தார். இருவரும் பிச்சை எடுத்து தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். அவர்களுடன் மரியமும் இருந்துள்ளார்.
மரியம் உடல் கண்டெடுக்கப்பட்ட நாளில் இருந்து தாய் ஹீனா, ராஜுவை காணவில்லை. இருவரும் சேர்ந்து சிறுமியை கொன்றிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருவரையும், பெங்களூரு சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.