ஒன்பதாவது முறையாகவும் மாற்றமில்லை தொடர்கிறது 6.50 சதவீத 'ரெப்போ' வட்டி
ஒன்பதாவது முறையாகவும் மாற்றமில்லை தொடர்கிறது 6.50 சதவீத 'ரெப்போ' வட்டி
ADDED : ஆக 08, 2024 11:02 PM

மும்பை:பலரும் எதிர்பார்த்ததைப் போலவே, ரிசர்வ் வங்கி, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. இதனால் வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வீட்டுக் கடன் வாகனக் கடன் போன்றவற்றுக்கான தவணை தொகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.
மும்பையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று நிறைவடைந்தது.
இந்த குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உட்பட நான்கு பேர், ரெப்போ வட்டி விகிதத்தை இதே நிலையில் தொடரவும்; இருவர் மாற்றம் மேற்கொள்ளவும் வாக்களித்தனர்.
இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
• ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது
நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 7.20 சதவீதமாகவே தொடர்கிறது
நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பும் 4.50 சதவீதமாகவே தொடர்கிறது
உலகளவில் பொருளாதார வளர்ச்சி சூழல் சாதகமாக உள்ள நிலையில், சவால்களும் இருக்கின்றன
நடப்பு கணக்கு பற்றாக்குறை கையாளக் கூடிய அளவிலேயே உள்ளது
அன்னிய செலாவணி கையிருப்பு 56.03 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது
நடப்பு நிதியாண்டில் ரூபாயின் இதுவரையிலான செயல்பாடு, எதிர்பார்த்த வரம்புக்குஉள்ளேயே உள்ளது
அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், வரும் அக்டோபர் மாதம் 7 முதல் 9ம் தேதி வரை நடைபெறும்.