68 வயது பா.ஜ., - எம்.எல்.ஏ., திருப்பதிக்கு சைக்கிள் பயணம்
68 வயது பா.ஜ., - எம்.எல்.ஏ., திருப்பதிக்கு சைக்கிள் பயணம்
ADDED : ஆக 05, 2024 09:52 PM

ராஜாஜிநகர் : ராஜாஜி நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பெங்களூரில் இருந்து திருப்பதி வரை, 285 கி.மீ., துாரத்தை, 15 மணி நேரம் சைக்கிளில் பயணித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
பெங்களூரு ராஜாஜி நகர் சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், 68. இவர் வாரந்தோறும் நீண்ட துாரத்துக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவரது ஆர்வத்தையும், உற்சாகத்தையும் பார்த்த சிலர், அவர்களும் எம்.எல்.ஏ.,வுடன் சேர்ந்து, சைக்கிளில் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக, 'தி ராஜாஜி நகர் பெடல் பவர்' என்ற 'சைக்கிள் பயணிப்போர் குழு' உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு சுரேஷ்குமார் தலைமை ஏற்று, கடந்த 3ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு, பெங்களூரில் இருந்து, திருப்பதிக்கு சைக்கிளில் புறப்பட்டனர். முதல் நாளில், 172 கி.மீ., துாரம் பயணம் செய்து, ஆந்திராவின் சித்துாரின் மதனபள்ளி அருகில் உள்ள போயகொண்டா கிராமத்தில் தங்கினர்.
மறுநாளான நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு போயகொண்டாவில் இருந்து புறப்பட்டனர். மதியம் 2:00 மணிக்கு, 113 கி.மீ., துாரம் பயணம் செய்து, திருப்பதியை அடைந்தனர்.
பெங்களூரில் இருந்து திருப்பதி வரை மொத்தம் 285 கி.மீ., துாரத்தை 15 மணி நேரம் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கிருந்து, படிக்கட்டுகள் மூலம் ஏறி, மாலை 5:00 மணிக்கு திருமலையை அடைந்தனர். இரவில் அங்கு தங்கி விட்டு, நேற்று காலை 9:00 மணிக்கு, ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
திருப்பதிக்கு சென்ற குழுவில் எம்.எல்.ஏ., சுரேஷ்குமாருடன், குழு உறுப்பினர்கள் சாகர் நாயுடு, ஹரிஷ், மகேஷ் தர்சி, அஸ்வின், திவாகர், மோகன்ராஜ், அய்யப்பா, சசாங்க், பாலு, கிரிஷ்கவுடா, கோபிநாத் சக்கரவர்த்தி, தினேஷ், மஹாதேவ், புனித் ஆகியோர் இருந்தனர்.
இதன் மூலம், 'தி ராஜாஜி நகர் பெடல் பவர்' குழு, 2024ல் இதுவரை 4,300 கி.மீ., துாரத்தை சைக்கிளில் பயணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.