எண்ணுாரில் 9 தொழிலாளர்கள் இறந்த சம்பவம்: ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
எண்ணுாரில் 9 தொழிலாளர்கள் இறந்த சம்பவம்: ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது வழக்கு
ADDED : அக் 02, 2025 12:46 AM

மீஞ்சூர்: சென்னை எண்ணுார் அனல்மின் நிலைய கட் டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநில தொழிலாளர்கள் ஒன்பது பேர் பலியான சம்பவத்தில், பணியின் போது அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பணிபுரிந்ததே காரணம் என, பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கட்டுமான பணி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில், மின் உற்பத்திக்காக அனல்மின் நிலைய கட்டுமான பணிகளில், 'பெல்' எனப்படும் பி.எச்.இ.எல்., நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
இதில், கர்நாடக மாநி லம் பெங்களூரைச் சேர்ந்த, 'மெட்டல் கோர்மா' என்ற ஒப்பந்த நிறுவனம், நிலக்கரி சேகரித்து வைப்பதற்கும், கையாளுவதற்கும் இரண்டு கிடங்குகள் அமைக்கும் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.
இங்கு நேற்று முன்தினம் இரும்பு தளவாடங்கள் பொருத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரும்பு தளவாடத்தின் ஒரு பகுதியில் உள்ள கம்பிகள் திடீரென சரிந்தன.
இதில், பணி செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, மங்கோல் கல்யாண்டியா, 34, என்பவர் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜாக்கிரதை
இந்த விபத்து தொடர்பாக, அனல்மின் திட்ட கட்டுமான பொறியாளர் ராஜலட்சுமி அளித்த புகாரையடுத்து, காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் பணிபுரிந்தது தெரிந்தது. மெட்டல் கோர்மா ஒப்பந்த நிறுவனத்தின் அஜாக்கிரதை காரணமாகவே இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து மெட்டல் கோர்மா நிறுவன உரிமையாளர், மேற்பார்வையாளர்கள் மூவர் என, நான்கு பேர் மீது, அலட்சியத்தால் ஏற்படும் மரணம், மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் என, இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் தடய அறிவியல் துறை நிபுணர்கள் அங்கு முகாமிட்டு, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.