கிராமங்களில் தடையற்ற 'இன்டர்நெட்' சேவை வரும் 11ம் தேதி துவக்கி வைக்க திட்டம்
கிராமங்களில் தடையற்ற 'இன்டர்நெட்' சேவை வரும் 11ம் தேதி துவக்கி வைக்க திட்டம்
ADDED : அக் 02, 2025 12:48 AM

திருப்பூர்: கிராம ஊராட்சிகளில் தடையற்ற 'இன்டர்நெட்' சேவை வழங்கும் நோக்கில், இரு ஆண்டுக்கு முன் துவங்கப்பட்ட, 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இச்சேவையை, வரும் 11ம் தேதி, முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.
அதிவேக இணைய சேவை வழங்க, பாரத் நெட் திட்டத்தில், தமிழ்நாடு பைபர் நெட் கழகம் வாயிலாக, தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் தோறும் ஆப்டிக்கல் பைபர் கேபிள் பொருத்தும் பணியும், இணைய தள சேவைக்கான உபகரணங்கள் பொருத்தும் பணியும் இரு ஆண்டுகளாக நடந்து வந்தன.
கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி மையங்கள், இதன் கட்டுப்பாடு அறையாக செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறியதாவது:
சில ஒதுக்குப்புறமான கிராமப்புறங்களில் இன்டர்நெட் இணைப்பு சரிவர கிடைக்காததால், அங்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியவில்லை. தற்போது, கிராம ஊராட்சிகளில் வழங்கப்படும் இன்டர்நெட் சேவையால் இக்குறை தவிர்க்கப்படும்.
கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு 'வைபை' இணைப்பு வழங்குவது, மொபைல்போன் டவர்களுக்கு இணைப்பு வழங்குவது, அலைவரிசை இணைப்புகளை 'டெண்டர்' அடிப்படையில் குத்தகைக்கு விடுவது உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு வருவாய் ஈட்டக்கூடிய செயல்களையும் மேற்கொள்ள முடியும்.
வரும், 11ம் தேதி நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என, எதிர்பார்க்கிறோம்.
அதற்கேற்ப, கிராம சபை கூட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் இதை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சேவையால், ஆப்டிக்கல் பைபர் கேபிள் வாயிலாக அனைத்து ஊராட்சிகளும் இணைக்கப்படும். இதன் வாயிலாக நிர்வாக பணிகள் எளிதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.