ADDED : பிப் 25, 2025 03:31 AM
பாட்னா: பீஹார் தலைநகர் பாட்னாவின் மசவுர்ஹி பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று வேலை முடிந்ததும் வேனில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வேனில், 10 தொழிலாளர்கள் வரை பயணம் செய்தனர். பாட்னா மாவட்டத்தின் மசவுர்ஹி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் சென்றபோது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.
அங்குள்ள நுாரா பாலத்தின் மீது இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மோதிய வேகத்தில், இரண்டு வாகனங்களுமே பாலத்தில் இருந்து கீழே விழுந்தன.
இதில், வேனில் பயணம் செய்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த பகுதியில் நெடுஞ்சாலை மிக ஆபத்தாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கை எடுக்கும்படி கூறியும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி, அங்குள்ள மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

