வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் இலவச மின்சாரம்: பீஹார் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேஜஸ்வி
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் இலவச மின்சாரம்: பீஹார் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேஜஸ்வி
ADDED : அக் 28, 2025 06:14 PM

பாட்னா: பீஹார் தேர்தலை முன்னிட்டு, இண்டி கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. பீஹாரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.
பீஹாரில் இரு கட்டங்களாக நவ.6 மற்றும் நவ.11 தேதிகளில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரசாரத்திலும் ஈடுபட்டு உள்ளன.
முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில் இண்டி கூட்டணி தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
பீஹாரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு ஆவணம் தான் தேர்தல் அறிக்கை. வளர்ச்சியில் மாநிலத்தை முதல் மாநிலம் ஆக்குவோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
மாநிலத்திற்கான தொலைநோக்கு பார்வை மற்றும் அதன் வளர்ச்சிக்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது. 5 ஆண்டுகளில் நாங்கள் எப்படி செயல்பட போகிறோம் என்பதை இதில் சொல்லி இருக்கிறோம்.
எங்களின் தேர்தல் அறிக்கையை தேஜஸ்வி பிராண் பத்ரா (Tejeshwi Pran Patra- தமிழில் தேஜஸ்வியின் தீர்மான ஆவணம் எனலாம்) என்று அழைக்கலாம்.
நாங்கள் தேர்தலுக்கு முன்பே எங்களின் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டோம். ஆனால் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிலை என்ன? அவர்கள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை, தேர்தல் அறிக்கையையும் வெளியிடவில்லை. எங்களின் வாக்குறுதிகளை தான் அவர்கள்(தேசிய ஜனநாயக கூட்டணி) நகல் எடுக்கிறார்கள்.
முதல்வர் நிதிஷ்குமாரும், பிரதமர் மோடியும் பீஹாருக்கு எதுவுமே செய்யவில்லை. எப்போது எல்லாம் பிரதமர் பீஹார் வருகிறாரோ அவர் எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டுகிறார்.
பீஹாரில் முதல் முறையாக 1500 மத்திய கம்பெனி பாதுகாப்பு படை வந்துள்ளது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக என்ன அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அவர்களுக்கு எல்லாம் நான் தாழ்மையுடன் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறன். அரசியலமைப்பு சட்டப்படி என்ன உறுதிமொழி எடுத்தார்களோ அதன்படி செயல்பட வேண்டும். எந்த தவறான உத்தரவுகளையும் பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டாம். நேர்மையற்று நடக்க வேண்டாம். ஓட்டுகளை திருட வேண்டாம்.
இம்முறை நாங்கள்(இண்டி கூட்டணி) மிகவும் விழிப்புடன் இருப்போம். சர்வாதிகார போக்கை தொடர விடமாட்டோம். வாக்காளர்கள் தங்களின் ஓட்டுகளை பாதுகாப்பார்கள். நேர்மையற்ற செயல்களை கண்டு பொறுக்கமாட்டார்கள்.
அனைத்து அதிகாரிகளும் நேர்மையாகவும், எவ்வித பாரபட்சம் இன்றியும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதிகார மாற்றத்தை காண மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். நவ.6 மற்றும் 11 தேதிகளில் மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். இம்முறை பீஹார் மக்கள் அந்த வாய்ப்பை தவறவிட மாட்டார்கள்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் பேசினார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;
1.ஆட்சி அமைந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சட்டம் இயற்றப்படும்.
2. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
3. டிச.1 முதல் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 நிதியுதவியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 நிதியுதவி அளிக்கப்படும்.
4. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம்.
5. ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
6. மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
7. பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 30 ஆக உயர்த்தப்படும்.
8. பட்டியலின பிரிவினருக்கு 16 சதவீதம் என்பது 20 சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டில் விகிதாச்சார அதிகரிப்பும் உறுதி செய்யப்படும்.
9. வக்ப் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும். அனைத்து இஸ்லாமிய மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
10. புத்தகயாவில் உள்ள புத்தகோவில்களின் நிர்வாகம், பவுத்த மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

