கர்நாடகாவில் நடந்த முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு 70 சதவீதம்!: அசம்பாவிதங்கள் ஏதுமின்றி 14 தொகுதிகளிலும் அமைதி
கர்நாடகாவில் நடந்த முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு 70 சதவீதம்!: அசம்பாவிதங்கள் ஏதுமின்றி 14 தொகுதிகளிலும் அமைதி
ADDED : ஏப் 27, 2024 05:54 AM

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று நடந்த முதல் கட்ட லோக்சபா தேர்தலில், 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி 14 தொகுதிகளிலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது.
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்படி, முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.
30,602 ஓட்டுச்சாவடிகள்
மொத்தம், 14 தொகுதிகளில், 2.88 கோடி வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 30,602 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெயில் காலம் என்பதால், பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் சாமியானா அமைக்கப்பட்டது. குடிநீர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், ஓட்டுச்சாவடிக்கு வந்து செல்ல, இலவச வாகன வசதி செய்யப்பட்டது. நேற்று காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையிலான வாக்காளர்களை ஓட்டு போட்டனர். ஆனால், வெயில் வாட்டி வதைக்கும் என்று கருதி, 7:30 மணியில் இருந்து, 11:00 மணி வரை குடும்பம், குடும்பமாக ஓட்டுச்சாவடிக்கு வந்ததை காண முடிந்தது.
பின், வெயில் அதிகமாக இருந்ததால் சற்று குறைந்தது. 4:00 மணிக்கு பின், மீண்டும் அதிகரித்தது.
முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டப்பதிவு செய்தனர். சில இடங்களில் மட்டும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. இதனால், அங்கு ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
அரசியல் கட்சிகளின் துண்டுகள் அணிவதில் ஆங்காங்கே சில சலசலப்புகள் நடந்தன. பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்களிடையே சில இடங்களில் வாக்குவாதம் நடந்தது. ஒரு இடத்தில் மட்டும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில இடங்களில் 6:00 மணியை தாண்டி, வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. மற்றபடி 14 தொகுதிகளிலும் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.
பெங்களூரு, மைசூரு, தங்கவயல் உட்பட பல்வேறு இடங்களில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டளிக்க வந்த பலர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருந்தன.
இதனால், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் தேர்தல் அதிகாரிகளிடம் 10 ரூபாய் செலுத்தி, சேலஞ் ஓட்டுப்பதிவு செய்தனர். கடந்த தேர்தல்களின் போது, ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியின் 100 மீட்டர் சுற்றளவுக்கு அரசியல் பிரமுகர்கள் டேபிள்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இம்முறை, 200 மீட்டராக மாற்றப்பட்டது.
நேற்று காலை 9:00 மணிக்கு, 9.21 சதவீதம்; 11:00 மணிக்கு, 22.34 சதவீதம்; 1:00 மணிக்கு, 38.23 சதவீதம்; 3:00 மணிக்கு, 50.93 சதவீதம்; 5:00 மணிக்கு, 63.90 சதவீதம்; இறுதியாக 69.23 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. 2019ம் ஆண்டு, இந்த 14 தொகுதிகளில் 68.96 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
2 தொகுதியில் குறைவு
சில இடங்களில் இரவு வரை ஓட்டுப்பதிவு நடந்ததால், ஓட்டு சதவீதம் சற்று கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சமாக, மாண்டியாவில் 81.48 சதவீதமும்; குறைந்தபட்சமாக, பெங்களூரு சென்ட்ரலில் 52.81 சதவீதம் ஓட்டுகளும் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலை விட, இம்முறை தட்சிண கன்னடா, பெங்., தெற்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.
...பாக்ஸ்...
தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம்
தொகுதி பெயர் 2024 2019
உடுப்பி - சிக்கமகளூரு 76.06 75.26
ஹாசன் 77.51 77.28
தட்சிண கன்னடா 77.43 77.70
சித்ரதுர்கா - தனி 73.11 70.59
துமகூரு 77.10 77.01
மாண்டியா 81.48 80.23
மைசூரு 70.45 68.85
சாம்ராஜ்நகர் - தனி 76.59 73.45
பெங்களூரு ரூரல் 67.29 64.09
பெங்., வடக்கு 54.42 50.51
பெங்., சென்ட்ரல் 52.81 49.75
பெங்., தெற்கு 53.15 54.12
சிக்கபல்லாபூர் 76.82 76.14
கோலார் - தனி 78.07 75.94
---------
பாக்ஸ்...
* காத்திருந்த துணை முதல்வர்
கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். ஏற்கனவே மூன்று முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த தேர்தலிலும் எளிதில் வெற்றி பெறலாம் என்று மிதப்பில் இருந்தார். ஆனால் சுரேஷை தோற்கடிக்க, வலுவான வேட்பாளராக, பா.ஜ., சார்பில் டாக்டர் மஞ்சுநாத் களம் இறக்கப்பட்டார்.
இதனால் தம்பியை எப்படியாவது வெற்றி பெற வைக்க சிவகுமார் களம் இறங்கினார். சென்னப்பட்டணா நகராட்சி ம.ஜ.த., தலைவர், பத்து கவுன்சிலர்களை, காங்கிரஸ் பக்கம் இழுத்தார். மஞ்சுநாத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்களை, காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று காலையில், கனகபுரா தொட்ட ஆலஹள்ளியில் ஓட்டு போட்டதும், சிவகுமார் பெங்களூரு செல்லாமல், கனகபுராவில் உள்ள வீட்டில் தங்கினார். அங்கு தங்கி இருந்து தம்பியை வெற்றி பெற வைக்க, வியூகம் வகுத்து கொண்டு இருந்தார். ஓட்டுப்பதிவு முடியும் வரை, கனகபுராவிலேயே இருந்த அவர், இரவில் பெங்களூரு வந்தார்.
பெங்களூரு ரூரல் தொகுதியில் 67.29 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலில் 64.98 சதவீதம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
***

