ADDED : மே 29, 2024 04:36 AM

சிக்கபல்லாப்பூர் : தன்னிடம் படித்த, எட்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாப்பூர் சித்லகட்டாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு 13 வயது மாணவி, எட்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில தினங்களாக, மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்தார். சந்தேகம் அடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் மகளை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
டாக்டர் பரிசோதித்த போது, சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்த போது, தலைமை ஆசிரியர் வெங்கடேஷ், 50 அடிக்கடி மிரட்டி, பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுகுறித்து டாக்டர், சித்லகட்டா போலீசில் புகார் அளித்தார். வெங்கடேஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன், மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுபற்றி தலைமை ஆசிரியரிடம் மாணவி கூறி உள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தலைமை ஆசிரியர், மாணவியை மிரட்டி தானும் பலாத்காரம் செய்தது தெரிந்தது.