மனைவியுடன் சேர்ந்து வாங்கிய சொத்தில் கணவர் தனி உரிமை கோர முடியாது: ஐகோர்ட்
மனைவியுடன் சேர்ந்து வாங்கிய சொத்தில் கணவர் தனி உரிமை கோர முடியாது: ஐகோர்ட்
ADDED : அக் 01, 2025 11:48 PM

புதுடில்லி:'கணவன் - மனைவி என இருவரின் பெயரிலும் அசையா சொத்து இருக்கும்பட்சத்தில், மாதத் தவணை செலுத்திய காரணத்திற்காக, கணவர் மட்டுமே அந்த சொத்துக்கு தனி உரிமை கோர முடியாது' என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, 2005ம் ஆண்டில் கூட்டாக சேர்ந்து மும்பையில் வீடு வாங்கினர். 2006ல் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால், தனித்தனியே பிரிந்து வாழத் துவங்கினர்.
இதனால், அதே ஆண்டில் விவாகரத்து கோரி கணவர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இருவரும் சேர்ந்து வாங்கிய வீட்டிற்கு தானே உரிமையாளர் என கணவர் கோரியதாக தெரிகிறது. இதை எதிர்த்து மனைவி சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'வீடு வாங்குவதற்கான பாதி தொகையை சீதனமாக கொண்டு வந்த பணத்தில் இருந்து கணவரிடம் வழங்கினேன். அந்த வகையில், அந்த வீட்டின் மீது எனக்கும் பாதி பங்கு இருக்கிறது' என கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
கணவன் - மனைவி என இருவரும் சேர்ந்து ஒரு சொத்தை வாங்கி, அதை இருவரின் பெயரில் பதிவு செய்திருந்தால், அந்த சொத்தின் மீது கணவன் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.
அப்படி உரிமை கொண்டாடுவது, பினாமி சொத்து பரிவர்த்தனைகள் சட்டத்திற்கு எதிரானது. வாங்கிய வீட்டிற்கு மாத தவணை செலுத்தி வந்த காரணத்தை சொல்லி, கணவர் மட்டுமே அந்த சொத்துக்கு ஏக போகமாக உரிமை கொண்டாடவும் முடியாது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.