பொதுவெளியில் விபரங்களை வெளியிடாத 54 பல்கலைகளுக்கு யு.ஜி.சி., 'கிடுக்கி'
பொதுவெளியில் விபரங்களை வெளியிடாத 54 பல்கலைகளுக்கு யு.ஜி.சி., 'கிடுக்கி'
UPDATED : அக் 02, 2025 07:47 AM
ADDED : அக் 01, 2025 11:39 PM

புதுடில்லி: உயர்கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்படி, பொதுவெளியில் கட்டாய விபரங்களை சமர்ப்பிக்காத 54 தனியார் பல்கலைகள் தவறிழைத்து உள்ளதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழு அறிவித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள பல்கலைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பொது நிதி ஆதாரங்களை பயன்படுத்தவும் மத்திய அரசு சார்பில் யு.ஜி.சி., அமைக்கப்பட்டது. இந்த அமைப்பின் சட்டப்பிரிவு 13ன் கீழ், பல்கலை தொடர்பான கட்டாய தகவல்களை பொதுவெளியில் சமர்ப்பிப்பது அவசியம்.
கட்டாய தகவல்
மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பல்கலை பற்றிய தகவல்களை எளிதில் அணுகும் வகையில் இணையத்தின் முகப்பு பக்கத்தில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன; காலியிடங்கள் எத்தனை?
ஒவ்வொரு படிப்புக்கும் எவ்வளவு கட்டணம் செலுத்துவது உட்பட பல்கலை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டாய தகவல்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஆனால், நம் நாட்டில் உள்ள பல பல்கலைகள், அந்த விபரங்களை இதுவரை வெளியிடாமல் இருப்பதை யு.ஜி.சி., கண்டறிந்துள்ளது.
இதன்படி, பதிவாளரால் சான்றளிக்கப்பட்ட துணை ஆவணங்களுடன், ஆய்வு நோக்கங்களுக்காக விரிவான தகவல்களை சமர்ப்பிக்கும்படி பல பல்கலைகளுக்கு இ - மெயில் மற்றும், 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்கள் வாயிலாக பல நினைவூட்டல்களை யு.ஜி.சி., நிர்வாகம் அளித்தது.
கடும் நடவடிக்கை
எனினும் இதில், 54 பல்கலைகள் அந்த விபரங்களை சமர்ப்பிக்காதது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவற்றை தவறிழைத்த பல்கலைகள் என யு.ஜி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தின் 10 பல்கலைகள் இடம்பிடித்துள்ளன.
இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், 'பல்கலைகள், தங்கள் இணையதளங்களில் வெளியிடும் தகவல்களை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக, தேடல் வசதியும் ஏற்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை தொடர்ந்து புறக்கணிக்கும் பல்கலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.