9 காங்., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., தீவிரம்?
9 காங்., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., தீவிரம்?
ADDED : செப் 06, 2024 05:53 AM

ஹாவேரி: ''எங்கள் கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., பேச்சு நடத்தி உள்ளது. ஆனால் அவர்கள் யாரும் 'பிடி' கொடுக்கவில்லை,'' என, சிறிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் போசராஜு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, வளர்ச்சிப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., முயற்சி செய்வதாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூறி இருந்தனர். மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகாவும், எம்.எல்.ஏ.,க்களை இழுக்க 100 கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக, பகீர் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் போசராஜு, ஹாவேரியில் அளித்த பேட்டி:
முதல்வர் பதவியில் சித்தராமையா தொடர்ந்து நீடிப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவாக உள்ளது. எங்கள் அரசை யாராலும் அசைக்க முடியாது.
பொய்களை திரும்ப திரும்ப கூறி அதை உண்மையாக்க, பா.ஜ., முயற்சி செய்யும். மாநிலத்தில் ஆப்பரேஷன் தாமரையை பா.ஜ., மீண்டும் துவக்கி உள்ளது. இது பற்றி எங்களிடம் தகவல் உள்ளது.
எங்கள் கட்சியை சேர்ந்த ஒன்பது எம்.எல்.ஏ.,க்களிடம், பா.ஜ., பேச்சு நடத்தி உள்ளது. ஆனால் அவர்கள் யாரும் 'பிடி' கொடுக்கவில்லை. ஆப்பரேஷன் தாமரை பற்றி முதல்வர், துணை முதல்வரிடம் எம்.எல்.ஏ.,க்கள் கூறி உள்ளனர். ராஜ் பவனை தவறாக பயன்படுத்தி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.