ADDED : ஆக 16, 2024 06:51 AM
பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ ரயிலில் நேற்று முன்தினம், ஒரே நாளில் 9.17 லட்சம் பேர், பயணம் செய்துள்ளனர்.
பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2011 முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. செல்லகட்டா - ஒயிட்பீல்டு; நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் தற்போது, ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ சேவை துவங்கப்பட்டதில் இருந்து, தினமும் சராசரியாக 6 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
கடந்த ஜூலை 19ம் தேதி, மெட்ரோ ரயிலில் ஒரு நாளில் 8.08 லட்சம் பேர் பயணம் செய்தனர். இது மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு சாதனையாக அமைந்தது.
பின், கடந்த 6ம் தேதி ஒரே நாளில் 8,26,883 பேர் பயணம் செய்தனர். இந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,17,000 பேர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். சுதந்திர தினத்தை ஒட்டி, பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை பார்க்க மக்கள், மெட்ரோ ரயிலில் செல்வதால், ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை, அதிகரித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்போது பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சிக்னல்களில் நின்று வாகன ஓட்டிகள் நொந்து போகின்றனர்.
இதை தவிர்க்க, தற்போது பெரும்பாலோனார் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.