'நீட்' தேர்வில் விடை எழுத ரூ.10 லட்சம் ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
'நீட்' தேர்வில் விடை எழுத ரூ.10 லட்சம் ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு
UPDATED : மே 11, 2024 04:09 AM
ADDED : மே 11, 2024 12:50 AM

கோத்ரா, 'நீட்' நுழைவுத் தேர்வில் விடையளிக்க உதவ, மாணவர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் கடந்த 5ல் நடந்தது. இதில், குஜராத் மாநிலத்தில் பல்வேறு மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று, முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கோத்ராவில் நீட் தேர்வு மையமான பள்ளி ஒன்றில் மாவட்ட கூடுதல் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், தேர்வு நடந்த நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளராக இருந்த துஷார் பட் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவரின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்ததில், 16 மாணவர்களின் பெயர்கள், வரிசை எண், தேர்வு மையம் தொடர்பான விபரங்களும், அவற்றை வேறொரு நபருக்கு அவர் அனுப்பியிருந்ததும் தெரிய வந்தது.
கையும் களவுமாக பிடிபட்டதை அடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதை அதிகாரிகளிடம் துஷார் பட் ஒப்புக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதும் 16 மாணவர்களின் பட்டியல் இது. தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடைஅளித்துவிட்டு, தெரியாத கேள்வியை விட்டுவிடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அவர்கள் விடைத்தாள்களை சமர்ப்பித்த பின், விடுபட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை குறிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ஆறு மாணவர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது. முன்பணமாக ஒரு மாணவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் பெறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் துஷார் பட் அளித்த வாக்குமூலத்தை அடுத்து, அவரின் காரில் இருந்த 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. துஷார் பட்டின் கார் மற்றும் மொபைல் போனும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
துஷார் பட், அவருக்கு உதவிய பரசுராம் ராய் மற்றும் ஆரிப் வோரா ஆகிய மூவர் மீது, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.