ADDED : மே 10, 2024 10:52 PM
சிக்கமகளூரு : மலைப் பிரதேசமான சிக்கமகளூருக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இவர்களில் வெளிநாட்டினர் சிலர், இங்கே சில மாதங்கள் தங்கி, மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்று விடுகின்றனர்.
இந்நிலையில், கடூர் பஸ் நிலையத்தில், வெளிநாட்டு நபர் ஒருவர், இடுப்பில் துண்டு மட்டும் அணிந்து கொண்டு, சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் வருவதை பார்த்த அந்த நபர், அவர்களின் பிடியில் சிக்காமல் பஸ் நிலையத்திற்குள் வேகமாக நடந்து கொண்டே இருந்தார்.
அரைமணி நேர இழுபறிக்கு பின், அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அவர் பெர்ஷிய மொழி பேசி உள்ளார். அவரின் மொழி தெரியாததால், அவருக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுத்த போலீசார், கடூரில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் ஏற்றி அனுப்பினர். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.