ரூ.10 லட்சத்தில் வாங்கியும் பயனில்லை தங்கவயலில் மூடி கிடக்கும் ஜெனரேட்டர்
ரூ.10 லட்சத்தில் வாங்கியும் பயனில்லை தங்கவயலில் மூடி கிடக்கும் ஜெனரேட்டர்
ADDED : மே 09, 2024 05:27 AM

தங்கவயல், : தங்கவயலில், 10 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட ஜெனரேட்டர், அதிகாரிகள் அலட்சியத்தால் மூடி வைக்கப்பட்டுள்ளது. மின் தடை நேரங்களில் தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
தங்கவயல் தாலுகாவுக்காக, மினி விதான் சவுதா என்ற பெயரில், ராபர்ட்சன்பேட்டை அம்பேத்கர் நகர் அருகில் 10 கோடி ரூபாய் செலவில் அலுவலகம் கட்டப்பட்டது. அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே உருவானது.
வருவாய்த் துறைக்கு உட்பட்ட அனைத்து பிரிவு அலுவலகங்கள், துணை பதிவாளர் அலுவலகம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை, தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, அங்கன்வாடி இடம் பெற்றுள்ளன.
சுகாதார நலத்துறை, ராபர்ட்சன்பேட்டை மகப்பேறு மருத்துவமனையில் இடம் பெற்றுள்ளது. சமூக நலத் துறை, வர்த்தக வரித்துறை ஆகியவை இன்னமும் பங்கார்பேட்டையில் தான் இயங்கி வருகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தங்கவயலில் இருந்து பங்கார்பேட்டை செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. சமூக நலத்துறையின் விடுதிகள் தங்கவயலில் இருந்தாலும், பங்கார்பேட்டையில் இருந்து தான் உத்தரவுகள் வருகின்றன.
மினி விதான் சவுதாவில் அலுவலகங்கள் அனைத்துமே கம்ப்யூட்டர் மயமாகி உள்ளது. மின்சாரம் இல்லாத நேரங்களில் பணிகள் தடைபடக்கூடாது என்பதற்காக, 10 லட்சம் ரூபாய் செலவில் டீசல் 'ஜெனரேட்டர்' வாங்கப்பட்டது.
இதை வாங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால், பயன்படுத்தாமல் பூட்டு போட்டு மூடி வைத்து உள்ளனர். மின் தடை நேரங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஜெனரேட்டர் பயன்படுத்தினால், இதற்கு ஏற்படும் டீசல் செலவை ஏற்பது யார் என்ற பிரச்னையால் பூட்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெனரேட்டர் இயக்காமல் வைத்திருந்தால், பயனற்று போய் விடும் என ஜெனரேட்டர் மெக்கானிக்குகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், 'மின் தடையை காரணம் காண்பித்து, கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை' என்று கூறி பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.