ADDED : மே 24, 2024 10:04 PM

டேராடூன் : உத்தரகண்டில் ஆறு யாத்ரீகர்கள் உட்பட ஏழு பேருடன் சென்ற ஹெலிகாப்டர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேதார்நாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவில், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு 'சார்தாம்' என்று அழைக்கப்படும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கான புனித பயணம் சமீபத்தில் துவங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வழிபடுவதற்காக இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், கேதார்நாத் கோவிலுக்கு செல்ல, உத்தரகண்டின் சிர்சி பகுதியில் இருந்து ஆறு யாத்ரீகர்கள் உட்பட ஏழு பேருடன் ஹெலிகாப்டர் புறப்பட்டது. கேதார்நாத் அருகே தரையிறங்கும் முன், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, பயணியரின் பாதுகாப்பை கருதி ஹெலிகாப்டரை பைலட் அவசரமாக தரையிறக்கினார். இச்சம்பவத்தில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவரும் கேதார்நாத்தில் வழிபட்ட பின் பாதுகாப்புடன் திரும்பி சென்றதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பயணியரை ஏற்றி வந்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.