தொடர்ந்து 12 மணி நேரம் 22 நிமிடம் நீச்சல் அடித்து தாய் - மகன் சாதனை
தொடர்ந்து 12 மணி நேரம் 22 நிமிடம் நீச்சல் அடித்து தாய் - மகன் சாதனை
ADDED : செப் 06, 2024 06:10 AM

பெலகாவி: தொடர்ந்து 12 மணி நேரம் 22 நிமிடங்கள் நீச்சலடித்து தாயும், மகனும் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இடம் பிடித்து, சாதனை புரிந்துள்ளனர்.
பெலகாவியை சேர்ந்தவர் ஜோதி, 44. இவர், கோடளி ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வக தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். இவரது மகன் விஹான், 12. செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜோதி, தன் 38வது வயதில் நீச்சல் கற்க துவங்கினார். மகனையும் அழைத்துச் சென்றார். நாளடைவில் இருவருக்கும் நீச்சல் மீது ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் 'ஸ்விம்மர்ஸ் கிளப் மற்றும் அகுவாரியஸ் ஸ்விம் கிளப்'பில் நீச்சல் வீரர்களாக உள்ளனர்.
தினமும் காலையில் இருவரும் ஜே.என்.எம்.சி., நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நீச்சல் பயிற்சியாளர் உமேஷ் கலகட்கி ஊக்கம் அளித்து வருகிறார்.
தாய் - மகன் இருவரும் சேர்ந்து நீச்சலில் சாதிக்க வேண்டும் என நினைத்தனர். அதற்காக நீச்சல் பயிற்சி பெற்ற, ஜெ.என்.எம்.சி., நீச்சல் குளத்தில் நேற்று அதிகாலை 5:08 மணி முதல் மாலை 5:30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் 22 நிமிடங்கள் நீச்சல் அடித்தனர்.
இவர்களின் சாதனையை, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' பிரதிநிதியும், நடுவராகவும் இருந்த ரேகா சிங் உறுதி செய்தார்.
''தாயும், மகனும் இணைந்து 12 மணி நேரம் 22 நிமிடம் தொடர்ந்து இரட்டை சாதனை செய்துள்ளனர்,'' என, ரேகா சிங் தெரிவித்தார்.
6_DMR_0001, 6_DMR_0002, 6_DMR_0003
தொடர்ந்து 12 மணி நேரம் 22 நிமிடங்கள் நீச்சல் அடித்த தாய் ஜோதி, (அடுத்த படம்) மகன் விஹான். (கடைசி படம்) சாதனை படைத்த பின் வெற்றி சின்னத்தை காண்பித்தனர்.