பார்த்து ரசிக்க வேண்டிய இடம் பசவராஜா துர்கா தீவு கோட்டை
பார்த்து ரசிக்க வேண்டிய இடம் பசவராஜா துர்கா தீவு கோட்டை
ADDED : ஜூலை 03, 2024 10:22 PM

உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவர் நகரில் இருந்து 4 கி.மீ., தொலைவிலும், தாரிபாகிலு கிராமத்தில் இருந்து 700 மீட்டர் துாரத்தில், அரபி கடலில் அமைந்துள்ளது 'பசவராஜா துர்கா தீவு கோட்டை'.
கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த தீவு, 46 ஏக்கரில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும் போது, சிறு மலை போன்று பசுமையாக காட்சியளிக்கிறது. தீவின் கிரீடமாக, காய்ந்த புற்கள், தங்க நிறத்தில் காணப்படுகிறது.
கோட்டை தீவு
தீவின் உச்சியில், 16 மற்றும் 17ம் நுாற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட நாகதேவதை கோவில் அமைந்துள்ளது.
ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று, படகு உரிமையாளர்கள், படகு ஓட்டுபவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வந்து தரிசனம் செய்வர். கடலை நம்பி வாழ்வதால், இயற்கை சீற்றத்தில் இருந்து தங்களை பாதுகாக்கவும், வழிநடத்தவும் இங்கு கோவில் அமைத்துள்ளனர்.
கடந்த 1690ல் விஜயநகர பேரரசு ஆட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இத்தீவுக்கு, 'பசவராஜா துர்கா தீவு' என பெயர் வைக்கப்பட்டது. அதன்பின், கேலடி மன்னர் சிவப்பா நாயகா, இந்த கோட்டையை கைப்பற்றி, 'கேலடி இளவரசர் பசவராஜா' தீவு என பெயர் மாற்றினார். ஆனாலும், இத்தீவு, பசவராஜா துர்கா தீவு என்றே அழைக்கப்படுகிறது.
இக்கோட்டைக்கு, தெற்கு பகுதியில் மட்டுமே கற்களால் ஆன படிக்கட்டுகள் அமைந்துள்ளன. கோட்டையின் எட்டு இடங்களில், கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. ஆனால், புற்கள், மரங்கள் நிறைந்து காணப்படுவதால், அவை தெரிவதில்லை.
இயற்கையின் அற்புதமான காட்சியை பார்த்தபடி, இந்த தீவில் நடந்து சென்று பார்க்கலாம். இத்தீவுக்கு, ஹொன்னாவரில் இருந்து படகில் 30 முதல் 45 நிமிடங்களிலும், தாரிபாகிலுவில் இருந்து 5 முதல் 10 நிமிடங்களிலும் செல்லலாம்.
அக்டோபர் முதல் மே வரை, இந்த கோட்டை தீவை கண்டு ரசிக்கலாம். காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சென்று பார்க்கலாம். படகுகள் மூலம், பயணியர் இத்தீவுக்கு அழைத்து செல்லப்படுவர்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ஹூப்பள்ளி விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில், ஹொன்னாவர் செல்லலாம். ரயிலில் செல்பவர்கள், பெங்களூரில் இருந்து ஹொன்னாவர் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.
கர்நாடகாவின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஹொன்னாவருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பசவராஜா துர்கா தீவு கோட்டையின் முழு தோற்றம். (அடுத்த படம்) தீவை சுற்றிலும் எழுப்பப்பட்டுள்ள கோட்டை சுவர். (கடைசி படம்) தீவின் மேல் தளத்தில் தங்க நிறத்தில் காணப்படும் புற்கள்.
- நமது நிருபர் -