ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கட்டுமான பணியில் புதிய சவால்
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கட்டுமான பணியில் புதிய சவால்
UPDATED : ஏப் 10, 2024 03:50 AM
ADDED : ஏப் 10, 2024 01:13 AM

புதுடில்லி, பாம்பனில் கட்டப்படும் நாட்டின் முதல் செங்குத்தாக மேல் எழும்பும் பாலத்தின் கட்டுமான பணியில் புதிய சவால் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவை, நிலரப்பரப்புடன் இணைக்கும் ரயில்வே பாலம், 1913ல் கட்டப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களால் 2022, டிச., 23 முதல் இந்த பாலம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. இதன் அருகே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி 2020, பிப்ரவரியில் துவங்கியது.
இந்த பணியை, 2021, டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கட்டுமானப் பணிகள் தடைபட்டன. தற்போது பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கடலின் குறுக்கே கட்டப்படும் இந்த பாலம், செங்குத்தாக மேல் எழும்பும் வகையில் அமைக்கப்படுகிறது. அந்த வழியாக கப்பல்கள் கடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முதல் செங்குத்தாக மேல் எழும்பும் பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
மொத்தம் 2.08 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்படும் இந்த பாலத்தின் மேலெழும்பும் பகுதி, 238 அடி நீளமும், 52 அடி அகலமும், 550 டன் எடையும் உடையது.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 1,476 அடி துாரத்துக்கு இந்த மேலெழும்பும் பாலத்தின் பகுதியை நகர்த்திக் கொண்டு வரும் பணி நடக்கிறது. கடந்த மாதம் 10ம் தேதி இந்த பணி துவங்கியது.
இதுவரை, 262 அடி நகர்த்தப்பட்டுள்ளது. வழியில், 2.65 டிகிரிக்கு வளைவான பாதை உள்ளது. இதன் மீது பாலத்தை நகர்த்திக் கொண்டு வருவது சவாலான வேலையாக அமைந்துள்ளது. 'அது நேரான பாதையாக இருந்தால் பணி சுலபமாக முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணி முடிந்து, ஜூன் முதல் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

