ADDED : ஆக 02, 2024 12:13 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் சில மாவட்டங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஷ்மீரின் சம்பா மாவட்டம், மங்குசெக் பகுதியில் நேற்று முன் தினம் இரவு, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 45 வயது நபர் ஒருவர், நம் எல்லைக்குள் ஊடுருவினார்.
அங்கு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவர் ஊடுருவுவதை கண்காணித்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஜம்மு - காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து எல்லை பாதுகாப்பு படையின் ஐ.ஜி., பூரா கூறுகையில், “ஊடுருவ முயன்ற நபர் பாதுகாப்பு படையினரை திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பட்டது போல் இருந்தது.
''அந்த இடைவெளியை பயன்படுத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பது, அவரது திட்டமாக இருந்திருக்கலாம்,” என்றார்.