தற்கொலை படை தாக்குதலில் 5,000 பெண்களுக்கு பயிற்சி; பயங்கரவாதி மசூத் அசார் கொக்கரிப்பு
தற்கொலை படை தாக்குதலில் 5,000 பெண்களுக்கு பயிற்சி; பயங்கரவாதி மசூத் அசார் கொக்கரிப்பு
UPDATED : டிச 05, 2025 07:58 AM
ADDED : டிச 05, 2025 05:38 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில், 5,000 பேருக்கு தற்கொலைப் படை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசார் கொக்கரித்துள்ளான்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளில், ஜே.இ.எம்., எனப்படும், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு முக்கியமானது. கடந்த, 2001ல், பார்லிமென்ட் தாக்குதல், 2016ல் பதான்கோட் தாக்குதல், 2019ல் புல்வாமா தற்கொலைத் தாக்குதல், சமீபத்தில் பஹல்காம் தாக்குதல் என, பல முக்கிய தாக்குதல்களை ஜே.இ.எம்., பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் வீரர்கள், 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நிலைகளை அழித்தனர். அதில், ஜே.இ.எம்., தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர், 14 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மசூத் அசார் சமீபத்தில் வெளியிட்ட சமூக ஊடக பதிவு:
ஜே.இ.எம்., அமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட, ஜமாத் - உல் - மோமினாத் என்ற பெண்கள் பிரிவில், 5,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்குள், 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்துள்ளனர்.
பஹவல்பூர், முல்தான், சியால்கோட், கராச்சி, முசாபராபாத் மற்றும் கோத்லி போன்ற பகுதிகளில் இருந்து பெண்கள் இணைந்துள்ளனர். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜமாத் - உல் - மோமினாத் பயங்கரவாத அமைப்புக்கு, மசூத் அசாரின் சகோதரி சயீதா தலைமை வகிப்பது பெரிய வந்துள்ளது. கடந்த மாதம் நாட்டையே உலுக்கிய டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குலுக்கு மூளையாக செயல்பட்ட பெண் டாக்டர் ஷாகின், இந்தியப் பிரிவுக்கு தலைமை தாங்கியவர்.
முன்பு ஜே.இ.எம்., பயங்கரவாதிகள், பெண்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்த்து வந்தன. தற்போது ஐ.எஸ்.,, ஹமாஸ் பாணியில், தங்கள் இருப்பை வலுப்படுத்தவும், எல்லையை விரிவுபடுத்தவும் பெண்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளன. இதனால். நம் பாதுகாப்பு அமைப்புகள், இந்தப் பிரிவின் விரிவாக்கத்தை கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த துவங்கியுள்ளன.

