நடிகர் சல்மான் வீட்டில் துப்பாக்கி சூடு கஸ்டடியில் இருந்தவர் தற்கொலை
நடிகர் சல்மான் வீட்டில் துப்பாக்கி சூடு கஸ்டடியில் இருந்தவர் தற்கொலை
ADDED : மே 02, 2024 01:20 AM
மும்பை, பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, விசாரணைக் காவலில் இருந்த அனுஜ் தபன், கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இவரது வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய மும்பை போலீசார், விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை கைது செய்தனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கும், லாரன்ஸ் பிஷ்னோய் மூளையாக செயல்பட்டார்.
தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோருக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக, அனுஜ் தபன், 23, சோனு குமார் பிஷ்னோய் ஆகியோரை பஞ்சாபில் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரையும் கஸ்டடியில் எடுத்து மும்பை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஆசாத் மைதான் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள லாக்கப்பில் அடைக்கப்பட்டிருந்த அனுஜ் தபன், கழிப்பறையில் போர்வையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

