குறைந்த அளவு தண்ணீர் வினியோக குழாய்கள் பெங்களூரு முழுதும் அமைக்க திட்டம்
குறைந்த அளவு தண்ணீர் வினியோக குழாய்கள் பெங்களூரு முழுதும் அமைக்க திட்டம்
ADDED : ஏப் 13, 2024 06:09 AM

பெங்களூரு: ''பெங்களூரு முழுதும் குறைந்த அளவு தண்ணீர் வினியோகிக்கும் குழாய்கள் அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்,'' என, குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பொதுமக்களுடன் தொலைபேசியில், அவர்கள் பகுதி குடிநீர் பிரச்னைகள் குறித்து, தலைவர் ராம்பிரசாத் மனோகர் கேட்டறிந்தார்.
தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர், கழிவுநீர், குடிநீர் கட்டண பிரச்னை குறித்த சந்தேகங்கள், பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் கேட்டனர். பெரும்பாலான புகார்கள் குழாய்கள் பழுதடைந்தது, குறைந்த அளவு தண்ணீர் வருவது தொடர்பாகவே இருந்தன.
அதற்கு ராம்பிரசாத் மனோகர் அளித்த பதில்:
காவிரி நீர் இணைப்பு இல்லாத பகுதிகளில், நீர் வினியோகத்தில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
நிலத்தடி நீர் குறைந்ததால், குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இவற்றை சீரமைக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டுள்ளது.
இப்பணிகளை துரிதப்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
புதிய குழாய்
பெங்களூரு கிழக்கு பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, புதிய குழாய் அமைக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு முழுதும் குறைந்த அளவு தண்ணீர் வினியோகிக்கும் குழாய்கள் அமைக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

