பங்கு சந்தையில் கடும் சரிவு ரூ.15 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு சந்தையில் கடும் சரிவு ரூ.15 லட்சம் கோடி நஷ்டம்
ADDED : ஆக 06, 2024 01:05 AM

மும்பை:இந்திய பங்குச் சந்தைகள் நேற்று மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள் 15 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தனர்.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குசந்தையின் குறியீடான சென்செக்ஸ் 2,200 புள்ளிகள் அளவுக்கு வீழ்ச்சியை கண்டது. இது 3 சதவீத சரிவாகும்.
கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பெரிய சரிவைக் கண்டு, அதன் பின் ஏற்றத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டது.
அமெரிக்காவில் வெளியான வேலைவாய்ப்பு வளர்ச்சி, எதிர்பார்த்ததற்கு மாறாக மிகவும் குறைவாக இருப்பதாக தரவுவெளியானது. இதையடுத்து, வர்த்தகர்கள் இடையே அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்றுவிடுமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
பங்கு சந்தை வர்த்தகர்களின் இந்த பயத்தால், அமெரிக்க சந்தைகள், கடந்த வெள்ளியன்று சரிவைக் கண்டன. இதன் அதிர்வலைகள் உலக சந்தைகளிலும் திங்களன்று பிரதிபலித்தன.
அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா என முக்கியமான நாடுகளின் சந்தைகள் எல்லாம் சரிவைக் கண்டதால், அதன் பாதிப்பு இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
ஏற்கனவே அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது, பங்குகளின் அதிக மதிப்பீடுகள் ஆகியவை காரணமாக, சந்தையில் எப்போது திருத்தம் ஏற்படுமோ என்ற எண்ணம் நிலவி வந்த நிலையில், அமெரிக்க நிலவரம் சரிவுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.
தேசிய பங்குச் சந்தையில் இடம்பெற்றிருக்கும் 12 துறையும் சரிவைக் கண்டன. மும்பை பங்கு சந்தையில் 3,408 பங்குகள் விலை சரிந்தன.