நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி; அமித் ஷா தேர்தல் பிரசாரம்
நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி; அமித் ஷா தேர்தல் பிரசாரம்
ADDED : அக் 24, 2025 05:46 PM

சிவான்: சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீஹாரில், இண்டி கூட்டணியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள். நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
பீஹாரில் பக்சர், சிவான் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் அவர் பேசியதாவது;
இங்கு காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள், அங்கு மோதல் நடந்து வருகிறது. மறுபுறம், இங்கே பிரதமர் மோடி இருமுறை பேரணிகளில் பேசி உள்ளார். முதல்வர் நிதிஷ்குமாரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
பாஸ்வான், குஷ்வாஹா என ஒவ்வொருவரும் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒன்றிணைந்துள்ளனர். நான் 2 மாதங்களாக பீஹாரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நான் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது.
14ம் தேதி (நவ.) மதியம் 1 மணியளிவில் லாலு பிரசாத் மகன்களின் ஆட்டம் முடிவுக்கு வரும். மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பீஹாரில் தேசிய ஜனநாயக கூ.ட்டணியின் ஆட்சி அமையும். நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி.
20 ஆண்டுகளாக சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த சகாபுதினை கண்டு துணிச்சலான சியான் மக்கள் பயப்படவில்லை. சகாபுதின் மகனுக்கு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ரகுநாத்புர் சட்டசபை தொகுதியில் சீட் வழங்கி உள்ளார்.
இப்போது நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், 100 சகாபுதின்கள் வந்தாலும் உங்களுக்கு எந்தவித தீங்கும் செய்ய முடியாது.
இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.

