ADDED : ஆக 04, 2024 11:07 PM

விஜயபுரா: ''உண்மையான தலித் என்றால் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகன் பிரியங்க் கார்கே இன்னும் காங்கிரசில் இருக்க மாட்டார்கள்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார்.
விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடக காங்கிரஸ் அரசு, தலித் விரோத கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. பா.ஜ., ஆட்சியில் எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகன் பிரியங்க் கார்கே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அம்பேத்கர் இறந்த போது அவரது உடலை அடக்கம் செய்யும் விஷயத்தில் கூட, காங்கிரஸ் பிரச்னை செய்தது. உண்மையான தலித் என்றால் மல்லிகார்ஜுன கார்கேயும், அவரது மகனும் காங்கிரசில் இன்னும் இருக்க மாட்டார்கள்.
சட்டசபை தேர்தலின் போது என்னை தோற்கடிக்க, எடியூரப்பா, விஜயேந்திரா, முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி சதி செய்தனர். மூன்று கோடி ரூபாயை எனது தொகுதிக்கு அனுப்பினர்.
என்னை முதல்வர் ஆகவிடாமல் தடுக்க, எடியூரப்பா முயற்சி செய்கிறார். கட்சியில் இருந்து என்னை துாக்கி எறிய வேண்டும் என, மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்.
ஆனால் நான் நேர்மையாக செயல்படுவதால், கட்சி மேலிடம் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.