சொந்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
சொந்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 12, 2024 05:48 AM

பெலகாவி,: ''பள்ளிகளில் பாடம் நடத்தாமல், சொந்த வேலைகளைசெய்யும் ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா எச்சரித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி
ஆசிரியர் பணியில் இருப்பவர், பள்ளியிலேயே இருந்து சிறார்களுக்கு, மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, அரசியல், சங்கம், தொழில் என, திரிவதாக புகார் வந்துள்ளது. இவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கட்டுப்படுவது இல்லை என்பது, என் கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்கள் உட்பட, அரசு ஊழியர்களுக்கு போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. அதற்காக அதையே வேலையாக்கினால் எப்படி. சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்க யாராலும் முடியாது. நீதிமன்றத்தில் நியாயமான முறையில் விசாரணை நடக்கிறது. அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே, எங்களின் விருப்பமாகும்.
நீதிமன்றத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்கம், மமதா பானர்ஜி மீதும் வழக்கு உள்ளது. இவர்கள் பா.ஜ.,வினர் கண்களுக்கு தெரியவில்லையா. முதல்வர் சித்தராமையா மட்டும் தென்படுகிறாரா.
எங்கள் தந்தை பங்காரப்பா, முதல்வராக இருந்த போது, இது போன்ற பல வழக்குகளை, நாங்கள் பார்த்துள்ளோம். இதை பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ., உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் சித்தராமையாவை கண்டால் பயம் உள்ளது.
அவர் சொன்னபடி நடந்துள்ளார். நல்லவரை பதவியில் இருந்து கீழே இறக்க, முயற்சி நடக்கிறது.
பா.ஜ.,வினர் இதுவரை சொந்த பலத்துடன் ஆட்சிக்கு வந்தது இல்லை. காங்கிரஸ் அரசு முடிய, இன்னும் நான்கு தீபாவளிகள் முடிய வேண்டும். அதுவரை பா.ஜ.,வினர் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

