31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
ADDED : டிச 24, 2025 03:28 PM

ஹைதராபாத்: வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவில் போக்குவரத்து துணை ஆணையருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகபூப்நகர் மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக இருப்பவர் கிஷான். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரது வீடு உள்பட 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அவருடைய சொத்து மதிப்பு ரூ.12.72 கோடி என்று மதிப்பிடப்பட்டாலும், சங்கா ரெட்டி மாவட்டத்தில் 31 ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.62 கோடி என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நிஷாமாபாத்தி நகராட்சிக்குட்பட்டு 10 ஏக்கர் நிலமும் சொந்தமாக வைத்துள்ளார். மேலும், லஹாரி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 50 சதவீத பங்குகளையும் கிஷான் வைத்திருந்துள்ளார். நிஷாமாபாத்தில் 3000 சதுர அடியிலான இடத்தையும் வாடகைக்கு விட்டுள்ளார்.
ஒரு கிலோ தங்க நகைகள், வங்கிக் கணக்கில் ரூ.1.37 கோடி பணம் மற்றும் சொகுசு கார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரையில் சம்பளம் பெறும் அரசு அதிகாரி ஒருவர், ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியாகி இருப்பது சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

