ஸ்வாதியை தாக்கியவர் மீது நடவடிக்கை ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் உறுதி
ஸ்வாதியை தாக்கியவர் மீது நடவடிக்கை ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் உறுதி
UPDATED : மே 15, 2024 10:34 AM
ADDED : மே 15, 2024 01:29 AM

புதுடில்லி, டில்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது.
அவரை சந்திக்க, சமீபத்தில், டில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு, அவரது கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி.,யும், டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் சென்றார். அப்போது அவரை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசாருக்கு தெரியப்படுத்திய ஸ்வாதி மாலிவால், முறைப்படி புகார் அளிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது டில்லி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இது குறித்து, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங் கூறியதாவது:
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க காத்திருந்த ஸ்வாதி மாலிவாலிடம், பிபவ் குமார் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரம் முதல்வர் கெஜ்ரிவால் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

