ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவுக்கு... ஜாமின்! 17 மாதங்களுக்கு பின் விடுதலை
ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவுக்கு... ஜாமின்! 17 மாதங்களுக்கு பின் விடுதலை
ADDED : ஆக 10, 2024 12:54 AM

புதுடில்லி, மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, 17 மாத சிறைவாசத்துக்குப் பின், அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது.
கடந்த, 2021 - 2022ம் நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கலால் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது.
இது, மதுபான விற்பனை நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேல் முறையீடு
இதையடுத்து, இந்தக் கொள்கையை நிறுத்தி வைத்து, டில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார். மேலும், மோசடி தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கலால் துறையை கவனித்து வந்த, முன்னனாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவிடம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை பலமுறை விசாரித்தன.
இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு, பிப்., 26ல், சி.பி.ஐ.,யால் அவர் கைது செய்யப்பட்டார். பிப்., 28ல் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத் துறையும், இதில் நடந்துள்ள பணமோசடி வழக்கில் அவரைக் கைது செய்தது.
இந்த வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தற்போது சிறையில் உள்ளனர்.
இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கேட்டு மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை, விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
டில்லி உயர் நீதிமன்றத்தின், மே 21 உத்தரவை எதிர்த்து, மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:
ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்காக இருக்க வேண்டும் என்ற கொள்கையை, விசாரணை மற்றும் உயர் நீதிமன்றங்கள் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.
இதனால்தான், ஜாமின் கேட்டு பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுபான ஊழல் வழக்கில், நீதிமன்ற விசாரணை துவங்காத நிலையில், 17 மாதங்களாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தனிமனித உரிமையை மீறும் செயல். தேவைப்படாத நிலையில், விசாரணையே துவங்காத நிலையில், ஒருவரை குற்றவாளியாக்கி, சிறையில் அடைப்பது தவறு.
இதை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இவர் சமூகத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்துள்ளார். தப்பி ஓடிவிட மாட்டார். அதனால் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.
உத்தரவு
அவர், 10 லட்சம் ரூபாய் சொந்த ஜாமின் மற்றும் அதே தொகைக்கு இரண்டு தனிநபர் ஜாமினில் விடுவிக்கப்படலாம். தன் பாஸ்போர்ட்டை அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விசாரணை அதிகாரிகள் முன், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், காலை 10:00 - 11:00 மணிக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை மிரட்டுவது, சாட்சியங்களை கலைப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா, திஹார் சிறையில் இருந்து, 17 மாத சிறைவாசத்துக்குப் பின் நேற்று விடுவிடுக்கப்பட்டார்.