பவாரியா கொள்ளையரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி., சிறப்பு தனிப்படை: டி.ஜி.பி.,க்கு ஜாங்கிட் கடிதம்
பவாரியா கொள்ளையரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி., சிறப்பு தனிப்படை: டி.ஜி.பி.,க்கு ஜாங்கிட் கடிதம்
ADDED : நவ 21, 2025 04:50 AM

சென்னை: 'பவாரியா கொள்ளை கும்பல் ஒழிக்கப்படாமல் உள்ளதால், ஜாமினில் வெளியே சென்று தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில், சிறப்பு படைகளை அமைக்க வேண்டும்' என, டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில், 1995 முதல் 2005 வரை, பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்தோர் பெரும் அட்டூழியம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த சுதர்சன் உட்பட, 13 பேரை கொலை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டு, ஐ.ஜி.,யாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்தார். இத்தனிப்படை போலீசார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாமிட்டு, பவாரியா கொள்ளையர்கள் 13 பேரை கைது செய்தனர். உ.பி.,யில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பவாரியா கொள்ளை கும்பல் குறித்து, டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட் எழுதியுள்ள கடிதம்:
நாங்கள் கைது செய்த பவாரியா கொள்ளையர்கள் 13 பேரில், நால்வருக்கு விசாரணை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. பின், சென்னை உயர் நீதிமன்றம், அதை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அந்த நால்வரில் பவாரியா கொள்ளை கும்பல் தலைவனான ஓமா, வேலுார் சிறையில் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். மற்ற மூவர், தண்டனை அனுபவித்து வருகின்றனர். மற்ற ஒன்பது பேர் ஜாமினில் வெளியே சென்று விட்டனர்.
இவர்கள் மீது நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. பவாரியா கொள்ளையர்களுக்கு உதவி செய்த, அக்கும்பலை சேர்ந்த 21 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களையும் கைது செய்ய வேண்டும். பவாரியா கொள்ளையர் குறித்து கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை மறுவிசாரணை செய்து, ஆறு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கொள்ளையர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தந்தோம்.
நாங்கள் மூன்று வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்தாலும், இன்னும் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகள் மீது சில ஆண்டுகளாக அக்கறை காட்டாமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது. சுதர்சன் கொலை வழக்கில், சில ஆவணங்கள் தொலைந்து போய்விட்டன; சில ஆவணங்களை மீண்டும் உருவாக்க வேண்டி உள்ளதாக, விசாரணை அதிகாரிகள் தெரிவிப்பது வேதனை அளிக்கிறது.
பவாரியா கொள்ளையர்கள் குறித்த வழக்குகள் எல்லாவற்றையும், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைக்க வேண்டும். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை மீண்டும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

