ஆம் ஆத்மி கட்சி பாதயாத்திரை கெஜ்ரிவால் பிறந்த நாளில் துவக்கம்
ஆம் ஆத்மி கட்சி பாதயாத்திரை கெஜ்ரிவால் பிறந்த நாளில் துவக்கம்
ADDED : ஆக 14, 2024 08:19 PM
புதுடில்லி:முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் ஆம் ஆத்மி கட்சி நேற்று துவங்க இருந்த பாதயாத்திரையை, போலீஸ் ஆலோசனையின் பேரில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது:
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பாதயாத்திரை நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அதைத் தள்ளி வைக்க டில்லி மாநகர போலீஸ் பரிந்துரை செய்தது.
போலீசார் கூறிய ஆலோசனையில் நியாயம் இருந்தது. எனவே, அதை ஏற்று பாதயாத்திரையை நாளை துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பாதயாத்திரை துவங்க வேண்டும் என்பது இயற்கையின் முடிவாகவும் இருக்கலாம்.
ஹிந்தி காலண்டர்படி கெஜ்ரிவாலின் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி அன்று வருகிறது. ஆனால், ஆங்கில காலண்டர்படி ஆகஸ்ட் 16ம் தேதி அவருக்குப் பிறந்த நாள். எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும். தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் இந்த பாதயாத்திரை செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.