ரேஷன் வினியோகத்தில் தாமதம் லாரி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை
ரேஷன் வினியோகத்தில் தாமதம் லாரி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜூலை 11, 2024 10:03 PM
விக்ரம் நகர்:நியாய விலைக் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்டு செல்வதில் வேண்டுமென்றே தாமதப்படுத்தும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க, டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டி.எஸ்.சி.எஸ்.சி., எனும் டில்லி மாநில பொதுவினியோக வாரியத்தின் பொதுமேலாளருடன் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசைன் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் எப்.சி.ஐ., எனும் இந்திய உணவுக் கழகத்தின் குடோன்களில் இருந்து நகரத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
கூட்டத்துக்குப் பின் அவர் கூறியதாவது:
ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வேண்டுமென்றே தாமதம் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தானியங்கள் ஏற்றிச் செல்லும் எந்த லாரியும் ஜி.பி.எஸ்., டிராக்கிங் கருவி இல்லாமல், சாலையில் ஓடக் கூடாது.
ரேஷன் வினியோகத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் வாகன ஓட்டுனர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள். உணவு தானியங்கள் ஏற்றப்பட்ட லாரிகளின் இயக்கத்தின் நேரடி தகவலை கண்காணிக்க அர்ப்பணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, ரேஷன் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு நீர் புகாத தார்பாய் போட்டு மூட வேண்டும்.
நியாய விலைக் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை நேரில் கண்காணித்து, உணவு தானியங்கள் வினியோகம் தொடர்பாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு டி.எஸ்.சி.எஸ்.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.