நடிகர் அர்ஜுனிடம் ரூ.1 கோடி மோசடி தர்ஷன் உதவியாளர் 6 ஆண்டாக தலைமறைவு
நடிகர் அர்ஜுனிடம் ரூ.1 கோடி மோசடி தர்ஷன் உதவியாளர் 6 ஆண்டாக தலைமறைவு
ADDED : மார் 31, 2024 11:03 PM
பெங்களூரு: நடிகர் அர்ஜுனிடம், 1 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, தலைமறைவான நடிகர் தர்ஷனின் முன்னாள் உதவியாளருமான, திரைப்பட வினியோகஸ்தர் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன், கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், கன்னடத்தை விட தமிழ் திரையுலகில் அதிகம் பிரபலமடைந்தவர்.
இவர் இயக்கி, தயாரித்த கன்னட திரைப்படம் 'பிரேம பரஹா', 2018ன் பிப்ரவரி 9ல் மாநிலம் முழுதும் வெளியானது. அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமானார்.
தர்ஷன் உதவியாளர்
படத்தின் பாடல் காட்சி ஒன்றில், நடிகர் தர்ஷனும், சிரஞ்சீவி சர்ஜாவும் நடித்திருந்தனர். படத்தை வினியோகிப்பது தொடர்பாக, தர்ஷனின் முன்னாள் உதவியாளராக இருந்த மல்லிகார்ஜுன், அர்ஜுன் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவர், 'ஸ்ரீ காலகாலேஸ்வரா என்டர்பிரைசஸ்' என்ற பட வினியோக நிறுவனம் வைத்திருந்தார்.
படம் திரைக்கு வந்து, ஆறேழு மாதத்துக்கு பின், கலெக்ஷன் பணத்தை தரும்படி, மல்லிகார்ஜுனிடம் அர்ஜுன் கேட்டுள்ளார். இவர் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை கொடுத்தார். இது 'பவுன்ஸ்' ஆகி விட்டது.
இந்த விஷயத்தை அர்ஜுன், தர்ஷன் கவனத்துக்கு கொண்டு சென்றார். அப்போது தான் அவரிடமும், மல்லிகார்ஜுன் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிந்தது. இவர் எங்கு சென்றார் என்ற தகவல், தர்ஷனுக்கும் தெரியவில்லை.
மல்லிகார்ஜுனின் சொந்த ஊரான கதக்குக்கும் அர்ஜுன், தன் நண்பர்களுடன் சென்று தேடினார். அங்கும் இல்லை. அதன்பின் அவரது மாமியார் ஊரான கொப்பாலுக்கு சென்று விசாரித்தனர். அவரது மனைவிக்கும் தெரியவில்லை.
பரபரப்பு கடிதம்
கணவர் மல்லிகார்ஜுன் எழுதிய கடிதத்தை, அர்ஜுனிடம் கொடுத்தார். அதில், 'தனக்கு கடன் தொல்லை அதிகரித்ததால், அவமானத்துக்கு அஞ்சி ஊரை விட்டு செல்வதாகவும், தன்னை தேட முயற்சிக்க வேண்டாம்' என, கூறியிருந்தார்.
ஆறு ஆண்டுகளாக மல்லிகார்ஜுனை கண்டுபிடிக்க முடியாததால், பெங்களூரின் நீதிமன்றத்தில், அர்ஜுன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

