அரசு ஊழியர்களிடம் இன்று கருத்து கேட்பு: அதிருப்தியாளர்களுக்கு திடீர் கெடுபிடி
அரசு ஊழியர்களிடம் இன்று கருத்து கேட்பு: அதிருப்தியாளர்களுக்கு திடீர் கெடுபிடி
UPDATED : டிச 22, 2025 02:25 AM
ADDED : டிச 22, 2025 02:05 AM

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம், அமைச்சர்கள் இன்று பேச்சு நடத்த உள்ள நிலையில், அதிருப்தியாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு உள்ளன.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்' என, கடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்போதைய ஆளுங்கட்சி தரப்பில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி ரியர்கள் சங்கங்கள், தி.மு.க., வுக்கு ஆதரவு அளித்தன.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் சங்கங்களிடம், அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் இடம் பெற்ற குழு கடந்த பிப்ரவரி மாதம் பேச்சு நடத்தி மனுக்களை பெற்றது.அந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், மூன்று அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. குழு சார்பில், அரசிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் குழுவினர் மீண்டும் இன்று தலைமை செயலகத்தில் பேச்சு நடத்த உள்ளனர்.
அப்போது கோரிக்கை மனு அளித்து கோஷங்கள் எழுப்பவும், நிகழ்ச்சி அரங்கில் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவும், பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இதையறிந்த அரசு வட்டாரம், அதிருப்தியாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது. சப்தம் இல்லாமல் வந்து மனு அளித்துவிட்டு செல்ல வேண்டும். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது. நிகழ்ச்சி அரங்கிற்கு வெளியே, தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தக்கூடாது.
எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருப்பு உடை, பேட்ஜ் உள்ளிட்டவை அணிந்து வந்து மனு அளிக்கக்கூடாது. அதை மீறி செயல்படும் சங்கங்களின் நிர்வாகிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

