பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து 18ல் நடிகர் பவன் கல்யாண் பிரசாரம்
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து 18ல் நடிகர் பவன் கல்யாண் பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 06:35 AM

பெங்களூரு : பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஜன சேனா கட்சி தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் நாளை மறுதினம் ராய்ச்சூர், பெங்களூரு வருகிறார்.
ராய்ச்சூர் பா.ஜ., வேட்பாள் ராஜா அமரேஸ்வர் நாயக் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அங்கு உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் அங்கு சென்ற ராதா மோகன் தாஸ் அகர்வால், இரு தரப்பினரிடம் பேசி சமாதானம் செய்து வைத்தார்.
இதையடுத்து பா.ஜ.,வினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர். அதேவேளையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில எல்லையை கொண்டுள்ள ராய்ச்சூரில் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்களை ஓட்டுகளை கவர, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதற்காக ஜன சேனா கட்சி தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாணை பிரசாரத்துக்கு அழைத்துள்ளனர்.
அவரும் நாளை மறுதினம் ஹைதராபாத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராய்ச்சூர் வருகிறார். காலை 11:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை கஞ்ச் சதுக்கத்தில் துவங்கி பசவேஸ்வர் சதுக்கம், அம்பேத்கர் சதுக்கம், ரயில் நிலையம், ஆர்.டி.ஓ., சதுக்கம வரை நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
மொத்தம் 5 கி.மீ., துாரம் ரோடு ஷோ நடத்த உள்ளது. ரோடு ஷோ முடிந்து கலபுரகி செல்கிறார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். மதியம் சிக்கபல்லாபூரிலும்; மாலை பெங்களூரு தெற்கு தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

