கட்சிக்கு எதிராக வேட்புமனு பா.ஜ.,விலிருந்து நடிகர் நீக்கம்
கட்சிக்கு எதிராக வேட்புமனு பா.ஜ.,விலிருந்து நடிகர் நீக்கம்
ADDED : மே 23, 2024 12:05 AM

கராகத், :பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகர் பவன் சிங், அக்கட்சியில் இருந்து அதிரடியாக நேற்று நீக்கப்பட்டார்.
பீஹாரில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ஆறாம் கட்டமாக நாளை மறுதினம் எட்டு தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவிருக்கிறது.
இங்கு, ஏழாம் கட்ட தேர்தல் நடக்கும் கராகத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திரா குஷ்வாஹா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இவருக்கு எதிராக பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகரும், அரசியல்வாதியுமான பவன் சிங் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார். இவர் கடந்த 9ம் தேதியே வேட்பு மனுவை தாக்கல் செய்தது, அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 17ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி என்பதால், அதற்குள் தன்னுடைய மனுவை திரும்பப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பவன் சிங் மனுவை திரும்பப் பெறாத நிலையில், தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியானது.
இதையடுத்து, பா.ஜ.,வின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக பவன் சிங்கிற்கு, பா.ஜ., மாநில தலைவர் அரவிந்த ஷர்மா கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து, பா.ஜ.,வில் இருந்து பவன் சிங் நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

