ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதவில்லையா? கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கோர்ட் கேள்வி
ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதவில்லையா? கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கோர்ட் கேள்வி
ADDED : நவ 07, 2025 11:51 PM

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, மாதந்தோறும் அளிக்கும் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தொகை போதவில்லை எனவும், கூடுதல் தொகை அளிக்க உத்தரவிடக்கோரி அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த மனு மீது விளக்கம் அளிக்கும்படி முகமது ஷமிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த 2014ல் ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்தார். எனினும், அடுத்த நான்காண்டுகளில் ஷமி மீது குடும்ப வன்முறை தொடர்பாக ஹசின் ஜஹான் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, ஷமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.
அப்போது முகமது ஷமி தன் மனைவிக்கு, 50,000 ரூபாயும், மகளுக்கு, 80,000 ரூபாயும் மாதாந்திர ஜீவனாம்சம் வழங்க அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்த ஹசின் ஜஹான், மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது ஹசின் ஜஹானுக்கு, 1.50 லட்சம் ரூபாய், மகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 லட்சம் ரூபாயை பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் வழங்க கடந்த ஜூலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக அளிக்கும் 4 லட்சம் ரூபாய் போதாது எனவும், முகமது ஷமியின் வருவாய், அவரது மகளின் எதிர்காலம் மற்றும் தான் அனுபவித்த வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் வைத்து, தனக்கு அளிக்கும் பராமரிப்பு தொகையை அதிகரித்து தர வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, 'ஜீவனாம்சம் தொகையாக தற்போது மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் அளிப்பது மிகப்பெரிய தொகை இல்லையா, இது போதவில்லையா?
'இந்த விவகாரத்தில், இருதரப்பும் சமரசம் செய்து தீர்வு காணுங்கள்' என, குறிப்பிட்டதுடன் முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

