பிடித்த முதல்வர் ஸ்டாலின் என வெட்கமின்றி சொல்கிறார் தேஜஸ்வி: அமித் ஷா கடும் விமர்சனம்
பிடித்த முதல்வர் ஸ்டாலின் என வெட்கமின்றி சொல்கிறார் தேஜஸ்வி: அமித் ஷா கடும் விமர்சனம்
ADDED : நவ 08, 2025 12:03 AM

பாகல்பூர்: ''தமிழகத்தில் ஆளும் தி.மு.க., பீஹார் மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. அப்படி இருக்கையில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான், தனக்கு பிடித்த முதல்வர் என, வெட்கமே இல்லாமல் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி கூறுகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாக கூறினார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முதற்கட்ட தேர்தல் இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
வரும் 11ல், மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் விறு விறுப்படைந்துள்ளது.
இந்நிலையில், பாகல்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவிடம், உங்களுக்கு பிடித்த முதல்வர் யார் என, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது.
கொஞ்சம் கூட வெட்க மின்றி, 'தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்' என பதிலளித்துள்ளார். ஸ்டாலின் யாரென்று நான் உங்களுக்கு சொல்கிறேன். அவரது கட்சியான தி.மு.க., தான், பீஹார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியது. அவரது கட்சி தான், பீஹார் மக்களை அவமானப்படுத்தியது.
இ ப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின் தான், தேஜஸ்விக்கு பிடித்த முதல்வராம். ஸ்டாலி னின் கட்சி தான், சனாதன தர்மத்தை அவமதித்தது; ராமர் கோவில் கட்டப் படுவதை எதிர்த்தது.
கூட்டணி பீஹாருக்கான வளர்ச்சி திட்டம் எதுவும் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியிடம் இல்லை. ஆட்சியில் இருந்த போது, ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளிப்பதைத் தவிர, ஏழைகளுக்காக எதுவுமே அக்கூட்டணி செய்யவில்லை.
லாலுவின் ஆட்சியில் பீஹாரின் கயா, அவுரங்காபாத், ஜமுய் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தினர். தற் போது தே.ஜ., கூட்டணி ஆட்சியில் அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

