ADDED : ஜூன் 27, 2024 11:10 PM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் கைதானதால், ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு நடிகை யமுனா ஸ்ரீநிதி அறிவுரை கூறியுள்ளார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, நடிகர் தர்ஷனுக்கு நெருக்கமான பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பினார்.
இதனால் தர்ஷன், கூலிப்படை வைத்து ரேணுகாசாமியை கொலை செய்து, கால்வாயில் வீசினார்.
இந்த வழக்கில் தர்ஷன் உட்பட பலர் கைதாகினர். இதனால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். போராட்டம் நடத்துகின்றனர். சில நடிகர் - நடிகையர் தர்ஷனுக்கு ஆதரவாகவும், கண்டித்தும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகை யமுனா ஸ்ரீநிதி, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது:
தர்ஷன் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு, நம்பிக்கையை கண்டு மனம் நெகிழ்கிறது. அவர்கள் பொறுமையை இழக்க கூடாது. சட்டத்தை கையில் எடுத்து கொள்ள கூடாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்ய, நீதிமன்றம் உள்ளது.
யார் என்ன பேசினாலும், பொறுமையுடன் இருங்கள். இந்த அசம்பாவித சம்பவத்தால், நம் அனைவருக்கும் வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது நமக்கு பொறுமை அவசியம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோழை அல்ல
ரேணுகாசாமி குடும்பத்துக்கு, நான் இரங்கல் தெரிவிக்கிறேன். நான் தர்ஷனுக்கு ஆதரவாக நிற்பேன். இதை கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தனிப்பட்ட முறையில் கலை மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவளிப்பேன். சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது. தர்ஷன் குற்றவாளி இடத்தில் நின்றுள்ளார். இவரை கை விடும் அளவுக்கு நான் கோழை அல்ல.
- பாவனா,
நடிகை.

