2 அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள்! அடுத்தடுத்து பாய்ந்த வழக்கு! என்ன நடக்கிறது?
2 அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள்! அடுத்தடுத்து பாய்ந்த வழக்கு! என்ன நடக்கிறது?
ADDED : செப் 21, 2024 10:24 AM

சென்னை; அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எம்.எல்.ஏ.
2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.
11 பேர் மீது வழக்கு
இந் நிலையில் அவர் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரின் 2 மகன்கள், உள்பட 11 பேர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.
வழக்கு பின்னணி
சென்னை பெருங்களத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வேண்டி சி.எம்.டி.ஏ., விடம் 2013ம் ஆண்டு விண்ணப்பித்தது. 2ஆண்டுகள் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை.
ரூ.27 கோடி லஞ்சம்
ஆனால், ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் மனு அனுப்பியது. லஞ்ச பணத்தை வைத்திலிங்கம் மகன்கள், உறவினர் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டது போல் கணக்கு காட்டப்பட்டு உள்ளது என்பது புகாரின் சாராம்சமாகும். ஆனால் கடன் பெற்ற நிறுவனம் 2014ம் ஆண்டில் இருந்து ஒரு ரூபாய் கூட வர்த்தகம் செய்யவில்லை என்பது வருமானவரித்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விசாரணை
அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில், உண்மை இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைவரிடமும் ஊழல் தடுப்பு பிரிவினர் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வழக்குகள்
சில நாட்கள் முன்பாக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்தடுத்து அ.தி.மு.க., மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.