12 ஆண்டுகளுக்கு பின் இன்று உரிகம் தபால் நிலையம் திறப்பு
12 ஆண்டுகளுக்கு பின் இன்று உரிகம் தபால் நிலையம் திறப்பு
ADDED : ஜூன் 27, 2024 11:06 PM

தங்கவயல்: தங்கவயலில் 12 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த உரிகம் தபால் நிலையம் இன்று திறக்கப்படுகிறது. ஜூலை 1 முதல் தபால் பரிவர்த்தனைகள் நடக்க உள்ளது.
கோலார் மாவட்டத்தில் முதன் முதலில் தங்கவயலில் உள்ள உரிகம் தபால் நிலையம், 1886ல் திறக்கப்பட்டது. இதன் பின்னரே மாரிகுப்பம், சாம்பியன், கோரமண்டல், ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையங்கள் திறக்கப்பட்டன.
பழமையான உரிகம் தபால் நிலையம், தங்கவயலின் தலைமை தபால் நிலையமாகவே செயல்பட்டது. இந்த அலுவலகத்தில், டெலிகிராம் பிரிவும் இயங்கி வந்தது. நாடு முழுதும், டெலிகிராம் பிரிவு மூடப்பட்ட போது, இங்கும் மூடப்பட்டது.
கட்டடம் பழுதடைந்ததால், உரிகம் தபால் நிலையம், 2012ல் மூடப்பட்டது. இதன் அலுவலகம், ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தனி பின்கோடு உள்ள தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்கள் ராபர்ட்சன்பேட்டை தபால் நிலையத்துக்கு இடமாற்றம் செய்தனர்.
இந்த தபால் நிலையம் புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் இன்று திறக்கப்படுகிறது. தபால் நிலையத்துக்கு தேவையான கம்ப்யூட்டர் உட்பட அனைத்து இயந்திரங்கள், மின் இணைப்பு வசதிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. இதற்கென திறப்பு விழா எதுவும் கிடையாது. ஜூலை 1 முதல் தபால் நிலைய பரிவர்த்தனைகள் இயங்கும்.
உரிகம் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் ரகுநந்தன், பெண் ஊழியர்கள் இருவர் உட்பட ஆறு பேர் பணியாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

