ADDED : மே 24, 2024 11:33 PM

புதுடில்லி: மத்திய அரசின், விவசாயிகளுக்கான பிரத்யேக தொலைக்காட்சியான, 'டிடி கிசான்' சேனலில், 24 மணி நேரமும் செய்தி மற்றும் நிகழ்ச்சிகளை, 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்க உள்ளனர்.
விவசாயிகளுக்கான பிரத்யேகமான, 'டிடி கிசான்' என்ற தொலைக்காட்சியை, மத்திய அரசின் துார்தர்ஷன் நிறுவனம் 2015ல் துவக்கியது. விவசாய சமூகத்தினருக்கான பயனுள்ள தகவல்கள் மற்றும் செய்திகளை இந்த சேனல் அளித்து வருகிறது. இந்நிலையில், டிடி கிசான் சேனல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, நாளை முதல் புதுப்பொலிவுடன் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது.
இதற்காக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இரண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். 'ஏ.ஐ., கிருஷ்' மற்றும் 'ஏ.ஐ., பூமி' என, அவர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன.
இந்த இரு செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர்களும், விவசாய ஆராய்ச்சி, சந்தை விலை, வானிலை முன்னறிவிப்பு, விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு தகவல்களையும் 24 மணி நேரமும் வழங்க உள்ளனர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் இவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளனர்.