ADDED : ஜூன் 26, 2024 01:26 AM
ருத்ரபூர், உத்தரகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்தின் பந்த்நகரில் விமான நிலையம் உள்ளது. இங்கு, உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவின் உதவி மேனேஜராக ஆசிஷ் சவுசாலி என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் உள்ள அவரது அறையின் மின் விசிறியில், பெண்கள் அணியும் உடையை அணிந்தபடி, நெற்றியில் குங்குமம், உதட்டில் லிப்ஸ்டிக் போன்றவற்றுடன், அவர் துாக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார், அறையின் கதவை உடைத்து, துாக்கில் தொங்கிய ஆசிஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையே, ஆசிஷின் அறையில் போலீசார் சோதனையிட்டதில் தற்கொலை கடிதம் உட்பட எந்த தடயமும் சிக்கவில்லை.
உயிரிழந்த ஆசிஷ் சவுசாலிக்கு, மனைவி மற்றும் இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளனர். ஆசிஷ், துாக்கில் தொங்கியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.