சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய ஆம்ஆத்மி
சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளியுங்கள்: நீதிமன்றத்தை நாடிய ஆம்ஆத்மி
ADDED : ஏப் 17, 2024 04:55 PM

புதுடில்லி: சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திஹார் சிறையில் இருந்தபடி டில்லியை ஆட்சி செய்ய முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி, டில்லி ஐகோர்ட்டில், ஆத்ஆத்மி கட்சி சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிரசாத் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், ‛‛ஊடகங்களில் டில்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
சிறையில் இருந்து ஆட்சி செய்ய முதல்வருக்கோ, பிரதமருக்கோ அரசியல் அமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

