காற்று மாசு குறைப்பில் முன்னேற்றம் ஆனாலும் தீவிர நடவடிக்கை தேவை
காற்று மாசு குறைப்பில் முன்னேற்றம் ஆனாலும் தீவிர நடவடிக்கை தேவை
ADDED : ஆக 29, 2024 01:07 AM
புதுடில்லி, காற்று மாசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட அளவை எட்டுவதற்கு இன்னும் தீவிர நடவடிக்கை தேவை என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலையின் எரிசக்தி கொள்கை மையம் சார்பில், காற்று தரம் மற்றும் வாழ்நாள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்படி, 2024ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டில் காற்று மாசு ஏற்படுத்தும் நுண்துகள்களின் எண்ணிக்கை 19.3 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், சராசரி வாழ்நாளில் ஓராண்டு அதிகரித்துஉள்ளது.
உலக அளவில் வங்கதேசத்துக்கு அடுத்து, காற்று மாசை அதிகளவில் குறைத்த நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக சுகாதார அமைப்பின்படி, பி.எம்., - 2.5 எனப்படும் 2.5 மைக்ரோ மீட்டர் விட்டமுள்ள நுண்துகள்கள், 1 கன மீட்டருக்கு, 5 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டும். இது, இந்தியாவில் 2022ல், 9 மைக்ரோ கிராமாக உள்ளது. முந்தைய 2-021 உடன் ஒப்பிடுகையில், 19.3 சதவீதம் குறைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை எட்டாவிட்டால், இந்தியர்களின் வாழ்நாளில் 3.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.
வானிலை சாதகமாக இருந்ததால், வெப்பத்தின் அளவு குறைந்தது, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் மாசு அளவை கட்டுப்படுத்துவதற்கு சாதகமாக அமைந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசை குறைப்பதற்காக, என்.சி.ஏ.பி., எனப்படும் தேசிய துாய காற்று திட்டம், 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, 2017ஐ அடிப்படை ஆண்டாக வைத்து, 2024க்குள் காற்று மாசை 20 - 30 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது, 2019 - 20ஐ அடிப்படை ஆண்டாக வைத்து, 2026ல் 40 சதவீதம் அளவுக்கு குறைக்க இலக்கு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

